பெறுபவர்களை விட கொடுப்பவர்களே பாக்கியவான்கள்-சுவாமி விவேகானந்தா

எனதருமை மகனே... மகளே...


முதுமையால் தள்ளாடும் என்னிடத்தில் பொறுமையாயிருந்து...

என்னை புரிந்துகொள்ள முயற்சி செய்!

நான் உணவருந்தும்போது அழுக்கானால்... சரியாக உடையணிய முடியாதிருந்தால்...

பொறுமையாயிரு. உனக்கு நான் அவற்றை கற்றுத்தர செலவிட்ட பலமணி நேரங்களை நினத்துப்பார்!

சொன்னதையே திரும்ப திரும்ப ஆயிரத்தொருமுறை நான் சொன்னாலும் கவனித்துக்கேள்.

நீ சிறுபிள்ளையாயிருந்தபோது உனக்கு தூக்கம் வரும்வரை ஒரே கதையை அயிரத்தொருமுறை திரும்ப திரும்ப சொல்லியிருக்கிறேனே...

நான் குளிக்க விரும்பாதபோது என்னை வற்புறுத்தி அவமானப்படுத்தாதே... கடிந்து கொள்ளாதே...

உன்னைக் குளிப்பாட்ட ஆயிரம் கற்பனை காரணங்களை சொல்லி உன் பின்னால் ஓடி வந்த நாட்களை நினை!

நவீன தொழில்நுட்பங்களை பற்றிய எனது அறியாமையை ஏளனம் செய்யாதே.

அவற்றை புரிந்து கொள்ள எனக்கு அவகாசம் கொடு, உணவருந்துதல், நன்றாக உடையணிதல், வாழ்க்கையை

தைரியத்துடன் எதிர்நோக்குதல் போன்ற எத்தனையோ எளிய காரியங்களை உனக்கு நான் கற்றுத்தந்திருக்கிறேனே

மறதி என்னை ஆட்கொள்ளும்போது சிடுசிடுக்காதே.

எனெனில் என் உரையாடலை விட நான் உன்னுடன் இருப்பதும், நீ என்னை கவனித்துக் கேட்பதுமே முக்கியம் !

நான் சாப்பிட விரும்பாதபோது கட்டாயப்படுத்தாதே.

எப்போது எனக்கு உணவு தேவை, எப்போது தேவையில்லை என்பதை நான் நன்கறிவேன்!

நீ முதலடிகளை எடுத்துவைத்தபோது நான் என் கரங்களை உனக்கு கொடுத்ததுபோல

என் கால்கள் தளரும்போது உன் கரங்களால் என்னைத் தாங்கு...

என்னிடம் பிழையிருந்தாலும் உனக்காக சிறந்ததையே நான் வாஞ்சித்தேன்.

மிக சிறந்ததையே முயற்சித்தேன் என்பதை ஒரு நாள் கண்டுகொள்வாய்!

நான் உனதருகில் வந்தால் சினமடைய வேண்டாம்.

என்னோடிருந்து என்னை புரிந்து கொண்டு எனக்கு உதவி செய்ய முயற்சி செய்.

நான் நடப்பதற்கு ஊன்றுகோலையிரு.

அன்பும் பொறுமையுடனும் என் பாதையை முடிக்க உதவியாயிரு.

மனமலர்ந்த புன்னகையும் ஆழ்ந்த அன்புமே அதற்காக என்னிடம் நீ பெறும் கைமாறு!

...ஒரு தாயின் அழுகுரல்

ஆதரவற்ற அன்னையரின் குமுறல்களை உணர்ந்து அவர்களை

19 ஆண்டுகளாக ஆதரித்து, அரவணைக்கும் ஆனந்தம் ததும்பும் அன்பு இல்லம்...

ஸ்ரீ அவ்வை ஹோம்


இன்றைய பரபரப்பான, வேகமான உலகத்தில் நம்மை உருவாக்கிய, நம்மை வாழ்வித்த முதியோர் இன்று மிகுந்த மனசுமையுடனே வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் உண்மையில் ஒரு குடும்பத்தில் முதியோர் இருந்தால், அது அந்த குடும்பத்தின் விலை மதிக்க முடியாத சொத்தாகும். இதுதான், நம் சமுதாயத்தின் கலாசார கட்டமைப்பு. இது விலகாதவாறு, அனைத்து தரப்பினரும் நடந்து கொள்ள வேண்டும். முதியோர் உடல்நலக் குறைவுக்கான சிகிக்சை வசதிகள் அனைத்து நகரங்களிலும் ஏற்படுத்தப்பட வேண்டும் என்கிறார் நம் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி.


நம் ஜனாதிபதி சொல்வதைப் போன்று இன்றைய நவீன வாழ்வியல் சூழலில் கணவன், மனைவி இருவருமே வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், அவர்களது வயதான பெற்றோர்கள் தனித்து விடப்பட்டு மிகுந்த மனச்சுமைகளுக்கு உள்ளாவது பெரும்பாலான குடும்பங்களில் சகஜமாகிவிட்டது. இதனால் தங்கள் மகனிடமோ, மகளிடமோ மனம் விட்டு கூட பேசமுடியாமல் அதற்கான நேரம் கிடைக்காமல் நம் இந்தியாவில் கிட்டத்தட்ட 81 லட்சத்திற்கும் அதிகமான முதியோர் பராமரிப்புக்காகவும், பாதுகாப்பிற்காகவும், பாசத்திற்காகவும் ஏங்குகிறார்கள் என்கிறது புள்ளி விவரம்.


மேலும், நம் நாட்டில் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களில் 50 சதவீதம் பேர் தங்களுடைய சொந்த குடும்பத்தினராலும், உறவினர்களாலும் அவமதிக்கப்படுகிறார்கள் என்கிறது 'ஹெல்த் ஏஜ் இந்தியா' என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம். இதற்கென கடந்த ஏழு ஆண்டுகளாக நம் நாட்டிலுள்ள 60 வயதிற்கும் மேற்பட்ட முதியவர்களிடம் இந்த நிறுவனம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இதில் டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட 12 பெரிய நகரங்களில் வாழும் 60 வயதுக்கு மேற்பட்ட 1200 ஆண் மற்றும் பெண் முதியவர்களிடம் ஆய்வு நடத்தியதில் 50 சதவிகிதமான முதியவர்கள் தங்களுடைய மருமகள், பிள்ளைகள் மற்றும் உறவினர்களால் அவமதிக்கப்படுவதையும் கண்டறிந்துள்ளது.


இதில் ஆண்கள் 38 சதவீதம், பெண்கள் 53 சதவீதம் அவமதிக்கப்படுவதாக அந்த ஆய்வு தெரிவிக்கின்றது. மேலும், இதில் நாட்டிலேயே பெங்களூரில் தான் 75 சதவீதம் அளவில் முதியவர்கள் அவமதிக்கப்படுகிறார்கள் எனவும், சென்னையில் 53 சதவீதம், டெல்லியில் 22 சதவீதம், கனபூரில் 13 சதவீதம் முதியவர்கள் அவமதிப்பு மற்றும் மனச்சுமையுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்கிற அதிர்ச்சித் தகவலை அந்த ஆய்வு தருகிறது.


மேலும், இதில் முதியவர்களை அவமதிப்பது 77 சதவீதம் குடும்ப உறவுகளால் ஏற்படுகின்றன எனவும், மற்ற 23 சதவீத அவமதிப்புகள் சாலை, பேருந்து நிலையம், மருத்துவமனை, கோவில் உள்ளிட்ட பொது இடங்களில் நிகழ்கிறது எனவும் அந்த ஆய்வு தெரிவிக்கின்றது. இதில் மிகப்பெரிய கொடுமை என்னவென்றால், நம் நாட்டில் 61 சதவீத முதியவர்கள் தங்களுடைய மருமகளாலும், 59 சதவீத பெற்றோர்கள் தங்களுடைய சொந்த மகன்களாலும் அவமதிக்கப்படுகிறார்கள்.


இதுமட்டுமின்றி நகர்புறத்தில் வாழும் முதியோரில் ஆறு பேரில் ஒருவர் போதிய ஊட்டச்சத்துள்ள உணவு கிடைக்கப் பெறாதவர் என்றும், மூன்றில் ஒருவர், முறையான மருத்துவ வசதியோ, தேவையான மருந்துகளோ பெற வழியில்லாதவர்கள் என்றும், இரண்டு பேரில் ஒருவர் குடும்பத்தினராலும், சமுதாயத்தாலும் கௌரமாகவும், மரியாதையாகவும் நடத்தப்படாதவர்கள் என்றும் அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது.


கூட்டுக் குடும்பம் எனும் மரம் செழித்தோங்கிய காலத்தில் முதியோர்கள் கடவுளாக போற்றப்பட்டனர். அது இன்று முற்றிலும் மாறிவருகிறது. இதற்கு முக்கிய காரணம், நம் சமூகத்தில் கூட்டுக் குடும்ப முறை சிதைந்து போனதும், நகர்ப்புற வாழ்க்கை முறையில் ஒவ்வொரு நிமிடமும் பணம் தேடும் நோக்கில், கணவன்-மனைவி இருவருமே வேலையை நோக்கிப் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருப்பதும் தான் இன்றைய குடும்ப சமுதாயத்தை பந்தபாசங்கள், உறவுமுறை போன்றவற்றிலிருந்து விலகியிருக்க செய்திருக்கிறது. மேலும் முதியோர்களை வேண்டாத மனிதர்களாக நடத்தும் கொடுமைகள் பல குடும்பங்களில் நடப்பதை நாம் கண்கூடாகக் காணலாம்.


அடுத்து, இன்று கிராமப்புறங்களில் சரியான வேலை கூட்டுக் வாய்ப்பின்மையால், பெரும்பாலான இளைஞர்கள் பெற்றோர்களை கிராமங்களிலேயே விட்டுவிட்டு வந்து விடுகின்றனர். அப்படி பிள்ளைகளால் கைவிடப்படும் முதியவர்களால், உழைத்துப் பிழைக்கத் தெம்பில்லாமல் போகும்போது, அவர்களது நிலை மிகவும் பரிதாபத்துக்குரியதாகி விடுகிறது.


மேலும், வயதானவர்களுக்கு உணவு, உடை போன்றவற்றைவிட மருத்துவத் தேவைகளே மிக முக்கியமென்பதால் அதைத் தருவதற்குக்கூட சரியான நபரின் உதவியின்றி நோயின் தாக்கத்திலும், மனச்சுமையிலும் அவதியுறும் அவலநிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். எந்த ஒரு மனிதரும் தள்ளாத வயதில் அனாதையாக்கபடுவது போல கொடுமை, வேதனை வேறு எதுவும் இருக்க முடியாது. அந்த வேதனையைத்தான் இன்று நாற்பது விழுக்காடு முதியவர்கள் அனுபவித்துக் கொண்டிருப்பதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.


குடும்ப கெளரவம் கருதியும், இவர்களுடன் தானே இறுதிவரை வாழ்ந்தாக வேண்டும் என்பதாலும் பல முதியோர்கள் தங்கள் மனவருத்தங்களை வெளியே சொல்லாமல் அவமானங்களை சகித்துக் கொள்கிறார்கள்.


இன்று முதியவர்களை குடும்பத்திற்கு ஒரு சுமை என்றுதான் இன்றைய இளைய தலைமுறையினர் கருதுகின்றனர். பாசம் முதியவர்களிடமிருந்து இளையவர்களுக்கு செல்கிறது. ஆனால் இளையவர்களிடமிருந்து அதே அளவு பாசம் முதியவர்களுக்கு செல்வதில்லை.