பெறுபவர்களை விட கொடுப்பவர்களே பாக்கியவான்கள்-சுவாமி விவேகானந்தா

எங்களைப் பற்றி...


நிராகரிக்கப்பட்ட பெண் முதியோர்களுக்கு அடைக்கலம் அளித்து அவர்களுடைய நலனுக்காகவே அர்பணிக்கப்பட்டுள்ளது ஸ்ரீ அவ்வை ஹோம். கடந்த 19 ஆண்டுகளாக ஆதரவின்றியும், நோய்களால் பாதிக்கப்பட்டும், நடக்க முடியாமலும், படுத்த படுக்கையாகவும் உள்ள வயதான அன்னையர்களுக்கு உணவு, உடை, இருப்பிடம், மருத்துவ வசதி மற்றும் அனைத்து தேவைகளையும் கருணை உள்ளம் படைத்தவர்களின் ஆதரவோடு இலவசமாக செய்து, தினசரி இறை வழிபாடு, தியானம், திருமுறை பாராயணம் செய்து அவர்களை அன்போடும், அரவணைப்போடும் இறுதிவரை பாதுகாத்து வருகின்றோம். இங்குள்ள பெண் முதியோர்கள் கனிவான கவனிப்புடன், ஆன்மீக வழிகாட்டுதலுடனும் மிக சிறப்பாக வாழ்ந்து வருகின்றனர். ஸ்ரீ அவ்வை ஹோமானது ஆதரவற்றோர்க்கு ஆலயமாகவும், நிழல்தரும் ஆலமரமாகவும் செயல்பட்டு வருகிறது


குடும்பத்திலிருந்து புறக்கணிக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட ஆதரவற்ற அன்னையரை அழைத்து வந்து உண்ண உணவும், உடுத்த உடையும், தங்க இடமும் தந்து, அவர்களின் துன்ப துயரங்களுக்கு செவி சாய்த்து, அனாதை என்ற உணர்வை போக்கி அவர்களை மகிழ்ச்சியான சூழலில் வாழ வைத்து வருகின்றோம்.


எத்தனை வரங்கள் வேண்டுமானாலும் பெற எளிய வழி அன்னதானம் செய்வது மட்டுமே. வயதான அன்னையர்களுக்கு அன்னமிடுவதால் தாங்கள் புண்ணியத்தின் பலனை முழுமையாக பெறுகின்றீர்கள். உதவி செய்யும் நல்லுள்ளங்கள் நீடுழி வாழ தினமும் கூட்டுப் பிரார்த்தனையும், மங்கள பிரார்த்தனையும், அக்னி ஹோத்ரமும் மற்றும் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று காயத்ரி ஹோமமும் நடைபெறும்.


ஸ்ரீ அவ்வை ஹோமானது இயற்கை சார்ந்த சூழ்நிலையில், குன்றத்தூர் முருகனின் பொற்பாதத்தின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. முதியோர் இல்லம் சோகங்களின் இருப்பிடமாக அல்லது புறக்கணிக்கப்பட்டவர்களின் சரணாலயமாக இருந்துவிடக் கூடாது என்கிற நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் உலக முதியோர் தினம் நமது இல்லத்தில் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த இல்லமானது பெண் முதியோர்கள் தங்களின் மனசுமைகளை மறந்து மகிழ்வுடன் வாழும் ஓர் இடமாக, இளைப்பாறுகிற ஒரு சோலையாக செயல்பட்டு வருகிறது. இங்கு நடக்க முடியாதவர்களையும் பராமரிக்கின்றோம் - இறுதிவரை பாதுகாத்து இறுதியில் தோள் தருகின்றோம்.


ஸ்ரீ அவ்வை ஹோமில் உள்ள ஆதரவற்ற அன்னையர்களும் மகிழ்வுடன் தாங்கள் விரும்பும் விசேஷ அல்லது பண்டிகை நாட்களை கொண்டாட உங்கள் அன்பளிப்புகளை பொருட்களாகவோ, தொகையாகவோ அனுப்பி உதவி செய்திட வேண்டுகிறோம். தங்களின் நன்கொடையால் பயன்பெறும் அனைத்து அன்னையர்களின் ஆசியாலும், வாழ்த்துக்களாலும் தாங்கள் பூரண ஆயுளும், அஷ்ட ஐஸ்வர்யங்களையும் பெறுவீர்கள். மேலும் தாங்களும் குடும்பத்துடன் இந்த இல்லத்தை பார்வையிடலாம்.


தங்களின் இதயத்தில் உருவாகும் தாய்ப்பாச உணர்வுக்கு உயிர்கொடுக்க விரும்பும் உன்னத உள்ளம் கொண்டோர் தம் உருகும் நல்ல உணர்வுகளை உதவிகளாக மாற்றி புண்ணியம் பெறலாம். வயதான அன்னையருக்கு நாம் செய்யும் சிறு உதவியும், நம்மை பெற்று சீராட்டி வளர்த்த அன்னையின் உள்ளத்தை குளிர செய்வதற்கு இணையாகும்.


அன்பில் ஓர் ஆழ்கடலாகவும், அரவணைக்கும் பாங்கில் ஓர் அன்னையாகவும் திகழும் இந்த ஆனந்தம் ததும்பும் அன்பு இல்லத்தை பார்வையிட்டு செல்லும்பொழுது மனதில் மிகப்பெரிய அமைதி ஏற்படும்.


ஆதரவற்ற அன்னையருக்கு செய்யும் தொண்டு இறைவனுக்கு செய்யும் தொண்டாகும். 'ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்' என்பார்கள், அதற்கு இணையாக அன்புக்கு ஏங்கி தவிக்கும் ஆதரவற்ற அன்னையரும் மகிழ்ச்சி பெற, நம்முடைய பங்கும் இருக்கும் என்றால் அதைக் காட்டிலும் வேறு மகிழ்ச்சி இருக்க முடியுமா?


தலைக்கட்டும் உங்கள் தலைமுறை! மகிழ்ச்சியும், செல்வமும் மேன்மேலும் பெருகட்டும் உங்கள் இல்லங்களில்!!