பெறுபவர்களை விட கொடுப்பவர்களே பாக்கியவான்கள்-சுவாமி விவேகானந்தா

எங்களின் நோக்கம்


கையில் பணமிருந்தாலும் வங்கிக்கு செல்வதிலிருந்து மருந்து வாங்கி வருவது வரை அடுத்தவர்களின் உதவியை நாடும் நிலையில் தான் முதியவர்கள் உள்ளனர். ஆக, இன்று நம் கண் முன்னே நம் பெற்றோர்கள் மிகுந்த மனச்சுமையில் வாடும் அவலம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையை நாம் ஆத்மார்த்தமாக வாக்கு மூலங்களாக இதயங்களில் பதிவாக்கி சிந்திக்க வேண்டும். முதுமை என்பது நம் வாழ்வின் ஒரு அங்கம். கண்டிப்பாக நாம் ஒருநாள் முதுமை அடைவோம், இதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.


"பிறர்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா

பிற்பகல் தாமே வரும்"என்னும் வள்ளுவரின் வரிகளுக்கேற்ப இன்றைக்கு நம் தாயை, தந்தையை எப்படி நாம் நடத்துகிறோம் என்பதை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கும் நம் பிள்ளைகள் நாளை நமது முதுமைக் காலத்தில் நம்மையும் அவர்கள் அப்படித்தான் நடத்துவார்கள் என்பதை மனதில் கொண்டு நம்மைப் பெற்ற தாயிடத்திலும், தந்தையிடத்திலும் அன்பையும், பாசத்தையும் செலுத்தி நூறு சதவீதம் உண்மையானவர்களாக வாழ வேண்டும்.


மேலும் நம் வீட்டிலுள்ள முதியவர்களை நாம் ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில், அவர்களுக்கு உடலிலும் மனதிலும் தெம்பு இருக்கும்வரை பிரச்சனையில்லை, திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்டால் மனமும் சேர்ந்து பாதிக்கப்படும்


சிறு குழந்தையை போல் மனதளவில் மாறிவிடுவார்கள். யாரையும் சார்ந்து இராமல், மற்றவர்களுக்கு உதவி செய்து பழக்கப்பட்டதால் அசௌகரியத்தை வாய்விட்டு சொல்லவும் மாட்டார்கள். அந்த சூழலில் இத்தனை நாள் அவர்களின் அனுசரிப்பில் வாழ்ந்த நாம் இப்போது அவர்களை கனிவாக கவனித்துக் கொள்ளவேண்டும்


அடுத்து, முக்கியமாக மாறி வரும் சமூக சூழலில், போதிய மருத்துவ வசதியும், தரமான தங்கும் வசதியும் கொண்ட முதியோர் இல்லங்கள் ஒவ்வொரு பேரூராட்சியிலும் அரசு உதவியுடம் நடத்தப்படும் இந்த முதியோர் இல்லங்களை, அந்தப் பேரூராட்சியில் இயங்கும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள், வங்கிகள், தொழிற்சாலைகள் போன்றவை தத்தெடுத்துப் பராமரிக்க வேண்டும்.


மேலும், நாற்பது வயதைக் கடந்தவர்கள் நாளைய எதிர்காலத்தை இன்றே மனதில் கொண்டு அதற்கான திட்டமிடல் வேண்டும். ஏனெனில் பழுத்த இலைகள் உதிர்வது என்பது காலத்தின் மாற்ற இயலாத நிகழ்வு. அப்படி உதிரும் நேரத்தில் தங்களது முதிர்ந்த வயதில் ஒரு அமைதியான, பாதுகாப்பான வாழ்க்கையை உருவாக்கிக் கொள்ளவும், யாரையும் சார்ந்திருக்காத வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவும், பொருளாதார ரீதியில் தங்களுக்கென ஒரு சேமிப்பு இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். முக்கியமாக தனக்கென ஒரு வீடும், வாழ்நாள் முழுவதும் யாரையும் அண்டி இருக்க வேண்டாத அளவு பொருளாதார பலம் அமைந்து விட்டால் அதுவே முதுமையின் தள்ளாமையையும் நோய்களையும் சமாளிக்கப் போதுமான பலத்தைப் தந்துவிடும்.


இதை நாளை முதியவராகப் போகும் இன்றைய நடுத்தர வயதினர் உணர்ந்துகொண்டு, நமக்காக தங்கள் வாழ்நாளையே அர்ப்பணித்த நம் பெற்றோர்கள் இன்று மன அமைதியுடனும், சந்தோஷத்துடனும் வாழ்வதற்கு நாம் உதவி புரியவேண்டும். இவ்விதம் நம் முதியவர்களைக் காப்பது நாம் அவர்களுக்கு செய்யும் நன்றிக் கடனாகும்.


இது உறவுகளிடையே பரஸ்பர அன்பும், மரியாதையும் நிலைபெறும் சூழலை உருவாக்கி குடும்பத்திலும், சமூகத்திலும் அமைதியையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதாக அமையும்.


முதியோர்களை மதிப்போம்! அவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்வோம்!!

அவர்கள் நிம்மதியாக, கௌரமாக வாழ எல்லோரும் உதவுவோம்!!!

இந்நிலை அடைய இளையவர்களின் மனமாற்றம் ஒன்றுதான் வழி!